மாரவில பிரதேசத்தை சேர்ந்தவரை வெள்ளை வானில் கடத்தியவர்கள் பொலிசாராம்!

van
நாத்தான்டிய பிரதேசத்தில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியாபிட்டி பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் இவரை கைது செய்துச் சென்றதாக மாரவில பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 6.30 மணிக்கு ரஜித லக்மால் மனோஜ் என்ற நபரின் வீட்டுக்குச் சென்ற குளியாபிட்டி பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

எனவே அவர் வெள்ளை வேனில் கடத்தப்படவில்லை என மாரவில பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவர் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் தொழில் புரிவதாகவும் சிறு வியாபாரமும் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரவில பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு நபர் மாரவில பொலிஸாருக்கு தெரியாமல் கைது செய்யப்பட்டுள்ளமை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

குளியாபிட்டி பொலிஸார் குறித்த நபரை கைது செய்வதற்கு முன்னர் அல்லது கைது செய்த பின்னர் மாரவில பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்திருக்க வேண்டும் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். ஆனால் அவ்வாறு செய்ய குளியாபிட்டி பொலிஸார் தவறியுள்ளனர்.

தமது வீட்டுக்கு வெள்ளை வேனில் வந்தவர்கள் தனது கணவரை கடத்திச் சென்றதாக ரஜித லக்மால் மனோஜின் மனைவி மாரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: