தீவிரவாத அமைப்பாக தொடர்ந்தும் புலிகள்; பட்டியலிட்டது அமெரிக்கா

ltte-flag
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதால் இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்கா அந்த அமைப்பைத் தொடர்ந்தும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான நாடுகளின் அறிக்கை, அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்டது.

அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2009 ஆம் ஆண்டின் பின்னரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதி ஆதரவு வலையமைப்ப தொடர்ந்தும் இயங்கி வருவது குறித்து இலங்கை அரசு கவலை கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடையவை என்று குற்றம்சாட்டப்படும் நிதி அமைப்புக்களை இலக்கு வைத்துப் பல தீவிரவாத முறியடிப்புச் செயற்பாடுகளை இலங்கை மேற்கொண்டுள்ளது.
போர் இடம்பெற்ற பிரதேசங்களில், 2012 ஆம் ஆண்டில் தொடர்ந்தும் இராணுவப் பிரசன்னத்தை இலங்கை அரசு அதிகரித்தே வைத்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீளஎழுச்சி கொள்ளும் சாத்தியம் குறித்து குரல் எழுப்பப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் எச்சங்களை முற்றாக அழிப்பதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை பயன்படுத்துகின்றது. இதனால் தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்புகளை இலங்கையுடன் மட்டுப்படுத்தியுள்ளோம்.

இலங்கை இராணுவத்தால் கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சட்டரீதியாகவும், கொள்கை ரீதியாகம் இந்த ஒத்துழைப்பை மட்டுப்படுத்துவதற்கு காரணமாகியது.

இருப்பினும் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் போன்றவற்றுடன் இலங்கை தனது கடல்சார் எல்லைப் பாதுகாப்பில் இணைந்து செயற்பட்டுள்ளது என்றுள்ளது.

Tags: ,