சுமந்திரனின் கருத்தை மறுத்த! மாவை ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வு காணமுடியாதாம்

mavai
‘ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது’ என்று தமிழ் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். ‘இலங்கையில் இன்று பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதிகாரங்களை பகிர்தல் என்பது கேள்விக்குறியான ஒன்று’ என்றார்.

‘ஐக்கிய தேசியக் கட்சியானால் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு என்ற அரசியல் அமைப்பின் நகல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது சுமந்திரனின் கருத்து’ என்று மறுத்த மாவை சேனாதிராசா, ‘இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கூடி தீர்மானிக்கும்’ என்றார்.

‘ஒரு வருடத்திற்கு முன்னர் தமிழ் மக்களின் தீர்வுத்திட்டம் தொடர்பில் நாங்கள் அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளளோம். ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் ஒரு வருடம் ஆகியும் அரசாங்கம் எந்தவிதமான பதிலையும் தரவில்லை’ என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ‘யுத்தத்தின் போது வடக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்றால் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

‘மக்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டார்கள் என்று அரசாங்கம் சர்வதேசத்திடம் தெரிவித்து வருகின்றது. அரசாங்கத்தின் இந்த கருத்தை நான் முற்றாக மறுக்கின்றேன். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இங்கு தனியார் காணிகளிலும், நலன்புரி முகாம்களிலும் வாழந்து வருகின்றனர்.

அத்துடன் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்தியாவில் வாழந்து வருகின்றனர். இந்தியாவில் இருக்கின்ற மக்கள் தங்கள் சொந்த மண்ணில் வந்து மீள்குடியேறுவதற்கு இந்திய அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ அவர் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், ‘தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மற்றும் ஜனநாயகப் போராட்டம் ஒடுக்கப்பட்டாலும் இன அழிப்பை மேற்கொண்டு வரும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: