
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மேன்முறையீட்டு மனுக்குறித்து கருத்துரைக்க பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை அனுமதியளித்துள்ளது.
குற்றப் பிரேரணையை விசாரணை செய்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிகையை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட ஆணைக்கோர் கட்டளையை இரத்துசெய்யுமாறு கோரியே சட்டமா அதிபரினால் விசேட மேன்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான சலீம் மர்சூக், பி.ஏ.இரத்னாயக்க, சந்தியா ஹெட்டிகே, ரிவா வணசுந்தர, ரோகிணி மாரசிங்க ஆகிய ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையிலேயே அவ்விருவருக்கும் கருத்துரைப்பதற்கு அனுமதியளித்த நீதிமன்றம், மனு மீதான விசாரணையை யூன் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு





