பிக்குவின் காரை கடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு – இருவர் காயம்

car-vavunia
கெப்பற்றிபொலவில் வைத்து பிக்குவின் காரை கடத்திக் கொண்டு சென்ற போது பொலிஸ் காவலரணில் நிறுத்தாது சென்றமையால் கார் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று புதன்கிழமை கெப்பிட்டிக்கொள்ளாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கெப்பிட்டிக்கொள்ளாவ பகுதியில் குறித்த கார் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இருப்பினும் இந்தக் கார் நிறுத்தாமல் சென்றதால்அப் பகுதியில் கடமையில் நின்ற பொலிசார் துட்டுவௌ 6ஆவது மைல்கல்லில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு தகவலை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து 6ஆவது மைல் கல்லில் பொலிஸார் காரை இடைமறித்தபோதும்இ கார் நிற்காமல் சென்றமையால் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கி சூட்டின் பின்பும் குறித்த கார் தப்பிச் சென்றமையால் திரத்திச் சென்ற பொலிசார், மடுகந்தை பகுதியில் காட்டுக்குள் நழைய முற்பட்ட காரையும் மீட்டுள்ளதுடன் அதனை கடத்தியவர்களையும் கைது செய்துள்ளனர். காரில் பயணித்த 4 பேரில் இருவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் தப்பியோடிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பபடவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்தின் போது,நிசந்த குமார மற்றும் எக்கநாயக்க ஆகியோரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,