
10 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த குடும்பஸ்தருக்கு 17 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது யாழ். மேல் நீதிமன்றம்.
புங்குடுதீவைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரன் என்பவருக்கே மேல் நீதிமன்றம் இவ்வாறு தண்டனை விதித்தது. இந்த வழக்கு தீர்ப்புக்காக யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2006 ஆம் ஆண்டு மே 7 ஆம் திகதி 10 வயதுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டில் புங்குடுதீவைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிரான வழக்கு யாழ். நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.
இதனடிப்படையில் சிறுமியைக் கடத்திய குற்றத்துக்காக 7 வருட கடூழியச் சிறைத் தண்டனையும், சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்துக்காக 10 வருடக் கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த இரண்டு குற்றத்துக்குமான தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இது தவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபா நட்ட ஈடாகச் செலுத்த வேண்டும் என்றும் அதனை செலுத்தத் தவறின் மேலும் ஒரு வருட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குற்றப் பணமாக நீதிமன்றுக்கு 10 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்றும் அபராதம் செலுத்தத் தவறினால் 2 மாதங்கள் மேலதிகச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் மேல் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.





