சிறுவர் ஒருவரை அடித்துக்கொண்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட சீனாவைச் சேர்ந்த நபரொருவரை அவரது குடும்பத்தினரே கடந்த 11 வருடங்களாக கூட்டில் அடைத்து பாதுகாத்து வருவதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஜயாங்ஸி மாகாணத்திலுள்ள லியாசொங் எனும் ஊரைச் சேர்ந்த 42 வயதான வு யன்ஹொங் என்ற நபரே இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு 15 வயதாக இருக்கும் போதே இவருக்கு மனநிலை பாதிப்படைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 2001ஆம் ஆண்டு 13 வயதான சிறுவரொருவரை அடித்துக்கொலை செய்துள்ளார். மனநிலை பாதிப்படைந்த நிலையில் இக்கொலை நிகழ்ந்தமையினால் அவருக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து அவரை கூட்டில் அடைத்து அவரது குடும்பத்தினர் பாதுகாத்து வந்துள்ளனர். இருப்பினும் அவ்வப்போது தப்பிச்சென்றுள்ளார் வு. இதனால் மிகவும் பலமான கம்பியினால் அமைக்கப்பட்ட கூட்டில் கால்களை சங்கிலியின் கட்டி அக்கூட்டினுள் அடைத்துள்ளார் அவரது தாய்.
இது குறித்து அவரது தாய் வேங் முக்ஸியாங் கூறுகையில், வு கொலை செய்திருந்தாலும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அவன் என்னுடைய மகன். மேலும் மிகவும் மன வேதனையுடனேயே கூட்டில் எனது கைகளால் அடைக்க முடிவு செய்தேன்.
ஒவ்வொரு முறையும் சாப்பாடு கொடுக்கும் போதும் கூட்டின் முன்னால் அமர்ந்து அழுது அழுது எனது கண்ணீரும் வற்றிவிட்டது என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சீனாவில் 1.35 பில்லியன் சனத்தொகை உண்டு. ஆனால் 20 ஆயிரம் மனோதத்துவ வைத்தியர்கள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சீனாவில் தற்போது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் 170 மில்லியன் பேர் இருப்பதாக 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பொன்று கூறுகிறது. இதில் 16 மில்லியன் பேரின் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும் அக்கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.