பேரெழுச்சியின் வயது 60

war
கடந்த மே மாதம் 21 ஆம் திகதி மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஒரு பொதுச் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த அழைப்பை ஏற்றுப் பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தன. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலர் லால் காந்த இந்த வேலைநிறுத்தம் பெரும் வெற்றி எனவும் அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை எனவும் தெரிவித்திருந்தார்.

அதேவேளையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த திஸ்ஸ அத்தநாயக்காவும் வேலை நிறுத்தம் பெரும் வெற்றிகரமாக இடம்பெற்றதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அரசோ வேலை நிறுத்தம் படுதோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தது.

வழமையாக 90 வீதமானோரே பணிக்குச் சமுகமளிக்கும் அரச ஊழியர்கள்; 93 வீதமானோர் அன்று வேலைக்கு வந்ததாக பொது நிர்வாக அமைச்சு பெருமையடித்துக் கொண்டது. இப்படியாக வேலை நிறுத்தம் தொடர்பாகப் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை ஒவ்வொருவரும் தமக்குச் சார்பாக வெளியிட்ட போதிலும் உண்மை நிலைமையை மக்கள் கண்களால் கண்டனர் என்பதைப் பலரும் மறந்துவிட்டனர்.

பல்வேறு துறைகளிலும் பணியாளர்களில் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்டனர். சில குறிப்பிட்ட துறைகள் முற்றாகவே செயலிழந்தன. பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் இடம்பெற்றன. அவ்வகையில் வேலை நிறுத்தம் ஓரளவுக்கு வெற்றிபெற்றதென்றே கூற வேண்டும்.

ஆனால் பொது வேலை நிறுத்தம் என்ற வகையில் பார்த்தால் இதை ஒரு தோல்வியடைந்த போராட்டமாகவே கருத வேண்டும். அரச காரியாலயங்கள், பாடசாலைகள், போக்குவரத்து, தொழில், வர்த்தக நிறுவனங்கள் என்பன முற்றாகவே முடங்கி விடவில்லை. ஒரு பகுதி இயங்கியது.

நாடே ஸ்தம்பிதம் அடையும் வகையிலான ஒரு வெற்றிகரமான பொது வேலை நிறுத்தமாக இது அமையவில்லை என்பதுதான் உண்மை. 1953 ஆம் ஆண்டு அரிசி விலையுயர்வுக்கு எதிராக ஒரு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போது இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தைவிட ஏனைய சகல தொழிற்சங்கங்களும் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி அமைப்புக்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வந்தன.

அனைத்துத் தொழிற்சங்கங்களும் இருவேறு சம்மேளனங்களாக அகில இலங்கை ரீதியில் ஒன்றிணைந்து பலம் பெற்றிருந்தன. 1953 ஆம் ஆண்டு பொது வேலை நிறுத்தத்தில் துறை முகங்கள், தொழிற்சாலைகள், அரச பணியகங்கள், வர்த்தக நிறுவனங்கள் எதுவுமே இயங்கவில்லை. போக்குவரத்துக்கள் கூட முற்றாகத் தடைப்பட்டிருந்தன. பாடசாலைகள் கூட இயங்கவில்லை.

ஒட்டு மொத்தத்தில் முழு நாடுமே செயலிழந்துபோனது. அரச பணியாளர்கள், தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்படனர். அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறியது.

அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப் பயந்து துறைமுகத்துக்குள் நின்றிருந்த ஒரு பிரிட்டிஷ் கப்பலிலேயே நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அன்று பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்கா பதவியைத் துறந்ததுடன் அரசியலிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துவிட்டார். பிரதமர் பதவியை முன்னாள் இராணுவ அதிகாரியான சேர்.ஜோன் கொத்தலாவல பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் உடனடியாக அவசர கால நிலைமையைப் பிரகடனம் செய்ததுடன், கண்டவுடன் சுடும் அதிகாரம் கொண்ட “மார்சல் லோ’ சட்டத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். இராணுவம் வீதியில் இறக்கப்பட்டது.

இலங்கை எழுதுவினைஞர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதில் கந்தசாமி என்ற அரச பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார். பின்னாள்களில் அமைச்சராக இருந்த. ரி.பி இலங்கரத்தினா உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.

இவ்வாறு பெரும் இராணுவ வன்முறை மூலம் அந்தப் போராட்டம் நசுக்கப்பட்டது. எனினும் முழு நாட்டையும் ஸ்தம்பிக்க வைத்த ஓர் அரசையே ஆட்டம் காண வைத்து பிரதமரையே பதவி விலகச் செய்த அந்தப் பொது வேலை நிறுத்தம் இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றில் ஓர் உச்ச கட்டமாகும்.

அதுமட்டுமன்றி உழைக்கும் மக்களின் சக்தியை அதிகார பீடங்களுக்கு உணர்த்திய மிகப் பெரும் சாதனையுமாகும். 1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற அந்தப் பேரெழுச்சியே 1956 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை மண்கௌவச் செய்து எஸ்.டபிள்யூ, ஆர்.டி. பண்டாரநாயக்கவை ஆட்சிபீடமேற்றியது.

அப்படியான ஒரு பொது வேலை நிறுத்தத்தை இலக்கு வைத்தே 2013 மே 21 ஆம் நாள் அதாவது 60 ஆண்டுகளுக்குப் பின்பு அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆனால் இன்று இந்தப் போராட்டம் ஆட்சி பீடத்தை அசைக்கவும் இல்லை. இராணுவத்தை வீதியில் இறக்கவுமில்லை. நாட்டின் இயல்பு நிலையில் பாதிப்பை ஏற்படுத்தவுமில்லை.

அரசுக்கு விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது. எரிபொருள், மின்சாரம் என்பவற்றின் விலையுயர்வு, அவற்றின் அதிகரிப்பு என்ற எல்லைக்குள் நின்று விடுவதில்லை.

தயாரிப்பு, விநி யோகம், விற்பனை போன்ற நடவடிக்கைகளில் எரிபொருள், மின்சாரம் என்பவற்றின் தேவை முக்கியமாதலால் சகல பொருள்களின் விலைகளிலும் அது உயர்வை ஏற்படுத்தும். வாழ்க்கைச் செலவைப் பலமடங்காக அதிகரித்து விடும்.

அப்படியிருந்தும் 60 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற பொது வேலை நிறுத்தம் போன்று வெற்றிகரமாக இடம்பெறவில்லை என்பது ஒரு பெரும் கேள்வியாக எழுந்தது. இந்தப் பொது வேலைநிறுத்தம் பெரும் வெற்றி பெறாமைக்கும் பெற முடியாமைக்கும் இரு முக்கிய காரணங்கள் உண்டு.

இந்தக் காரணங்களின் மூல வேர்கள் அரசு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளும்தான் என்பது ஓர் அடிப்படை உண்மை. அப்படி இருக்கும்போது எதிர்க்கட்சிகள் தலைமை தாங்கும் வேலை நிறுத்தம் எப்படி வெற்றி பெற முடியும்.

முதலாவது காரணம் ஏறி வந்த ஏணியைக் காலால் உதைத்த கதை. 1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது வேலை நிறுத்தம் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வர ஒரு முக்கிய அடித்தளத்தை அமைத்தது. ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததும் ஏழு பேர் இணைந்தால் ஒரு தொழிற்சங்கத்தை அமைத்து அதைப் பதிவு செய்ய முடியும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதற்கு முன்பு அங்கத்தினர் எந்தக் கட்சியாக இருந்தபோதும் ஒரே சங்கமாக பலத்துடன் இருந்து தமது உரிமைக்குப் போராடும் நிலை இருந்தது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கென சங்கங்கள் அமைத்துக் கொள்ள தொழிலாளர் பலம் பிளவுபடுத்தப்பட்டுக் குறைக்கப்பட்டது.

தொழிலாளர் சங்கங்கள், கட்சிகளின் சங்கமாக மாறிவிட்டன. அதன் பயன் எதிர்க்கட்சிகள் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கினாலும் அரச சார்பு தொழிற்சங்கங்கள் அவற்றை எதிர்க்கும். நிர்வாகத்துக்கு எதிரான போராட்டம் என்ற நிலை மாறி தொழிற்சங்கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலையே ஏற்பட்டு வருகிறது.

மே 21 பொது வேலை நிறுத்தத்துக்கு எதிராக அலவி மௌலானா தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கொழும் பில் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியமையை மறந்துவிட முடியாது. இப்படியான ஒரு நிலையில் ஒரு பொது வேலை நிறுத்தம் எப்படிச் சாத்தியமாகும்.

அடுத்த காரணம் அரசின் பிரசாரம். அதாவது நாட்டின் அமைதியையும் அபிவிருத்தியையும் குழப்புவதற்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களின் பணத்திலும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஆதரவுடனும் நாட்டுக்கு எதிராகச் செய்யப்படும் சூழ்ச்சியின் ஒரு பகுதியே இந்த வேலை நிறுத்தம் என அரசும் அரச ஊடகங்களும் பிரசாரங்களை மேற்கொண்டன. நாட்டின் ஓர் அங்குல நிலத்தைக் கூட பயங்கரவாதிகளுக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி சவால் விட்டார்.

தமிழ் மக்களின் போராட்டம் பயங்கரவாதமல்ல அது ஒடுக்குமுறைக்கு எதிரான அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கான ஒரு போராட்டம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியோ, ஜே.வி.பியோ என்றுமே ஏற்றதில்லை. தமிழ் மக்களின் போராட்டம் பயங்கரவாதமல்ல என்ற செய்தியை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரையும் அரசு தன்னைப் பயங்கரவாதத்துக்கு எதிரான போராளியாகக் காட்டி அந்த மக்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளும்.

தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் நசுக்கப்பட்டதும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் அரச பயங்கரவாதம் என்பதை பகிரங்கமாகப் பிரசாரம் செய்யும் நேர்மையோ, துணிவோ ஐக்கிய தேசியக் கட்சியிடமோ ஜே.வி.பியிடமோ இல்லை.

இந்த நிலையில் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டதைச் சொல்லி அரசுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பயங்கரவாததுக்கு ஆதரவானவையாகக் காட்டி அரசு அரசியல் செய்வதை எவராலும் தடுக்க முடியாது.

இலங்கை வரலாற்றில் ஒரு சாதனையாகக் கருதப்படும். 1953 ஹர்த்தால் இடம்பெற்று 60 ஆண்டுகளாகும் நிலையில் தொழிலாளி, விவசாயிகள் கட்சிகளாகவும், இனங்களாகவும் பிளவுண்டு போயுள்ளனர். நம் மேல் திணிக்கப்படும் அடக்கு முறைகளுக்குத் நாமே கட்சியின் பேரால் அரசு கொடுக்கும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

அதேவேளை சிறுபான்மையினர் மீதான ஒழுங்கு முறைக்குத் துணைபோகுமளவுக்கு பெரும்பான்மையினத் தொழிலாளர்கள் தங்கள் வர்க்க குணாம்சத்தை இழந்து விட்டனர். இந்தநிலை மாறாத வரை இலங்கையில் வெற்றிகரமான பொது வேலை நிறுத்தமோ, உழைக்கும் மக்களுக்கு விமோசனமோ கிடைக்கப்போவதில்லை.

Tags: ,