
‘கோத்தபாய ராஜபக்ஷ என்பவர் இன்று ஒரு அமைச்சின் செயலாளர். வேறு எந்த ஒரு அமைச்சின் செயலாளரும் பகிரங்கமாக அரசியல் பேசுவதில்லை.
ஜனாதிபதியின் சகோதரர் என்ற ஒரே அந்தஸ்த்து காரணமாக அவர் தன்னை ஒரு உப ஜனாதிபதியாக உருவகித்துக் கொண்டு வரம்பு மீறி பகிரங்கமாக அரசியல் பேசுகிறார்’ என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
‘கோத்தபாயவுக்கு நான் ஒரு ஆலோசனை கூறுகிறேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக அவர் நாடாளுமன்ற உறுப்பினாராக பதவி ஏற்கட்டும். அதன் பிறகு பாதுகாப்பு அமைச்சர் ஆகட்டும். அரசியலமைப்பை திருத்தி உப ஜனாதிபதியாகக்கூட ஆகட்டும். அதுபற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. ஆனால் நாடாளுமன்ற வாத, விவாதங்களில் கலந்துகொண்டு பதில் சொல்லும் கடப்பாடு இல்லாத இடத்தில் இருந்துகொண்டு அவர் அரசியல் பேசி நாட்டை குழப்பக்கூடாது” என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்படக் கூடாது என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.





