1956 பெளத்த அலையும் 2014 புதிய அரசமைப்பு அலையும்

dss
1947ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஐ.தே.கட்சி அரசை எவராலும் வீழ்த்த இயலாது என்றதொரு பொது நம்பிக்கை அந்தக் காலகட்டத்தில் நிலவியது.

பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவுக்குப் பின்னர் பிரதமர் பதவியை அடைய எதிர்பார்த்துக் காத்திருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அரசிலிருந்து வெளியேறிய சமயத்தில் அரசு வீழ்ச்சியடையப் போகிறது என்று சிலர் எதிர்வு கூறியபோதிலும் ஐ.தே.கட்சி அரசு நலிவு காணவில்லை.

டி.எஸ்.சேனநாயகாவின் மரணத்தின் பின்னர் இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் ஐ.தே.கட்சியே பெருவெற்றி கண்டது. ஐ.தே.கட்சி அரசைப் பண்டாரநாயகவாலும் கூட வீழ்த்திவிட இயலாதென அந்த வேளையில் பலரும் உணர்ந்து கொண்டனர்.

அந்தக் காலகட்டத்திலேதான் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம், பௌத்த மதத்தை மேன்நிலைப்படுத்தும் நோக்குடன் ஆணைக்குழுவொன்றை நியமித்தது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் இயங்க நேர்ந்ததால் பௌத்தர்களது விகிதாசாரம் குறைவடைவதாகவும், பௌத்த மதத்தவர்கள் புறந்தள்ளப்படுவதாகவும் அந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த பௌத்த மதத் தலைவர்கள் உட்பட சிங்கள புத்திஜீவிகள் குற்றம் சுமத்தினர்.

பௌத்த மதத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் ஆட்சியாளர்கள் அந்த விடயத்தில் அக்கறை காட்டி தலைமை தாங்கிச் செயற்பட வேண்டுமென்ற கருத்துக்கு கடும் ஆதரவு நிலவியது.

1956 ஆம் ஆண்டில் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தான் நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசியல் தலைமைத்துவமொன்றை தேட முயன்றது.

சிங்கள பௌத்த பின்னணியை இழந்திருந்த, மேற்குலக நாடுகளின் ஆதரவாளரான அந்த வேளைய பிரதமர் சேர்.ஜோன் கொத்தலாவலவுடன் பௌத்த மகா சம்மேளன பௌத்த பிக்குமார் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதிலும், பௌத்த மதத்தை வளர்ச்சியடைய வைப்பதற்கான ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சேர்.ஜோன் நாட்டமெதனையும் காட்டினாரில்லை.

இதனால் அதிருப்தியுற்ற பௌத்த பிக்குமார், ஐ.தே.கட்சி அரசை வீழ்த்தும் திட்டத்துக்குத் தலைமை தாங்கி வழி நடத்தப் பொருத்தமான தலைவரொருவரைத் தேட ஆரம்பித்தனர்.

அந்த வகையில் முதலில் அவர்கள் அந்த வேளைய எதிர்க்கட்சித் தலைவர் பண்டாரநாயக்கவைச் சந்தித்தனர். அந்த வேளையில் சேர்.ஜோன். கொத்தலாவலவுடன் முரண்பட்டுக் கொண்டு பிரதமர் பதவியை விட்டு விலகி தற்காலிகமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த டட்லி சேனநாயக்கவை தலைமைதாங்க உடன்பட வைத்தால் தாமும் டட்லியுடன் இணைந்து அரசை வீழ்த்தும் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியுமென பண்டாரநாயக்க பௌத்த பிக்குமாரிடம் தெரிவித்தார்.

மக்களைக் கவரும் சக்தி தமக்கு இல்லையென அந்த வேளையில் பண்டாரநாயக்கா நம்பியதால் பௌத்த பிக்குமார் நேராக டட்லி சேனநாயக்கவிடம் சென்று தமது கோரிக்கையை முன் வைத்தனர்.

டட்லி சேனநாயக்கவோ, தம்மால் அரசியல் அரங்குக்கு வெளியிலிருந்தே உதவ முடியுமெனவும், அரசைக் கவிழ்க்கும் திட்டத்துக்குத் தலைமை தாங்க பண்டாரநாயக்கவே பொருத்தமானவர் எனவும் தெரிவித்ததுடன், அடுத்த பொதுத் தேர்தலில் சேனநாயகா குடும்பம் கொத்தலா வலவுக்கு ஆதரவு வழங்க மாட்டா தெனவும் உறுதியளித்தார்.

அத்துடன் பௌத்த பிக்குமாரின் முயற்சிக்குத் சேனநாயக்க குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.ஜி.சேனநாயக்கவின் உதவி ஒத்தாசையையும் பெற்றுத் தருவதாகவும் பௌத்த பிக்குமாருக்கு வாக்குறுதி வழங்கினார்.

எவராலும் வீழ்த்த இயலாதென விமர்சிக்கப்பட்ட ஐ.தே.கட்சி அரசை, 1956 ஆம் ஆண்டில் பௌத்த பிக்குமார் தரப்பு தமது விடாமுயற்சியால் பதவிலிருந்து அகற்றி, பௌத்த மத உரிமைகளைப் பாதுகாக்கும் ஓர் அரசை உருவாக்கும் போராட்டத்தை முன்னெடுத்த வரலாறு இதுவே.

அவர்களது அந்த முயற்சிக்கு நாடு பூராவும் பரந்து வாழ்ந்து வந்த பௌத்த பிக்குமார் தரப்பின் பூரண ஆதரவும் கிட்டியது. இன்று மாதுளுவாவே சோபிததேரர் ஆரம்பித்துள்ளதும் அத்தகையதொரு போராட்டமே. 1978 ஆம் ஆண்டின் அரசமைப்பு மூலம் நாசமுற்ற அரச நிர்வாக நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த முயலும் போராட்டமே அது.

முன்னர் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், மற்றும் ஆங்கிலேயர் என்ற ஏகாதிபத்தியவாதிகளது நிர்வாகத்தில் பௌத்தமதம் நலிவுபடுத்தப்பட்டது. இன்று இந்த நாட்டின் அரச நிர்வாக நடைமுறை சீர்குலைந்தமைக்குக் காரணம் 1978 ஆம் ஆண்டின் அரசமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதிகளின் நிர்வாகமே.

ஆயினும் இந்த நடைமுறையை மாற்றியமைக்கத் தலைமை தாங்கிச் செயற்படத்தக்கதொரு தலைவரைக் கண்டுபிடிக்க அன்று போன்று இன்றும் சோபிததேரர் உட்பட பௌத்த குருமார் சிரமமுற நேர்ந்துள்ளது.

அன்றைய சேர்.ஜோன் கொத்தலாவல போன்று இன்று ஆட்சி அதிகாரம் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரங்களை மேலும் பலப்படுத்தும் நோக்குடன் செயற்படுகிறாரேயன்றி, அவற்றை விலக்கிக் கொள்ளும் வகையில் செயற்பட விரும்பவில்லை.

அன்றுபோன்று இன்றும்கூட எவராலும் கவிழ்க்க இயலாதெனக் கூறப்படும் மஹிந்தவின் தலைமையிலான அரசைக் கவிழ்த்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்துக்கட்டி நாட்டின் நிர்வாக நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த இந்த நாட்டின் பௌத்தமத பீடங்களாலேயே இயலும்.

1956 ஆம் ஆண்டைப் போன்று இன்றும் சோபித தேரரின் தலைமையில் நிறைவேற்று ஜனாதிபதி நடைமுறையை மாற்றியமைக்க ஆணைக்குழுவொன்றை உருவாக்கி நாடு தழுவிய ரீதியில் பௌத்த விகாரைகளில் உதவு அமைப்புக்களை நிறுவி சாட்சியங்களைப் பெற்று அறிக்கையொன்றைத் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், நாட்டின் நிர்வாக நடைமுறையை மாற்றியமைக்கத்தக்க தலைவரொருவரோ அல்லது தலைவியொருவரோ தானாக உருவாக வாய்ப்புண்டு.

இன்று எதிர்க்கட்சியில் அன்றைய தலைவர்கள் போன்று எவரும் இல்லை. அன்று பண்டாரநாயக்கவைத் தலைமை தாங்குமாறு பௌத்த பிக்குமார் கோரியபோது தம்மைவிட டட்லி சேனநாயக்கவுக்கு நாட்டு மக்களது ஆதரவு அதிகமுள்ளதெனக் கூறி பண்டாரநாயக்க, டட்லி சேனநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் தாம் செயற்பட விரும்பினார்.

டட்லி சேனநாயக்காவை பௌத்த பிக்குமார் அணுகியபோது பண்டாரநாயக்காவுக்கே தலைமைத்துவத்தை வழங்குமாறு டட்லி சேனநாயக்க பெருந்தன்மையுடன் கூறிக்கொண்டார்.

அன்று தலைமைத்துவ வேட்கை கொண்ட தலைவர்களல்லாது, கொள்கையை வென்றெடுக்க எத்தகைய அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள தயாரான தலைவர்களே இருந்தனர். இன்றுகூட சோபிததேரரின் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி வழி நடத்த அத்தகையதொரு தலைவரே அவசியமாகிறார்.

அத்தகைய தலைவரொருவரோ தலைவியொருவரோ ஆகாயத்திலிருந்து குதிக்கப்போவதில்லை. வேளை வரும் போது மக்கள் மத்தியிலிருந்து அத்தகைய ஒருவர் உருவாவார்.

இன்று நிறைவேற்று ஜனாதிபதி நடைமுறையை இல்லாதொழிக்கும் யோசனைக்கு மகாநாயக்க தேரர்களது ஆசீர்வாதமும் கிட்டியுள்ளது. அன்று குங்குணாவே பௌத்த மதகுருமார் சிறையில் இருந்தவாறே வெள்ளையர்களை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்க அரசனொருவனைத் தேடமுயன்றனர்.

இன்று சோபிததேரர் தேடுவதும் அத்தகையதொரு தலைமைத்துவத்தையே. அத்தகையதொரு தலைமைத்துவம் இந்த நாட்டு அரசியலரங்கில் உருவாவதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை.  -uthayan

Tags: