புதுடில்லியில் விரைவில் ஈழத்தவர் ஆதரவு ஆட்சி; இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாண்டியன் உறுதி

ltte-flag
புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிøரவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்காலில் காவு கொள்ளப்பட்ட எமது உறவுகளின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் அவர்கள் எந்த இலட்சியத்துக்காக மடிந்தார்களோ அந்த இலட்சியம் விரைவில் நிறைவேறும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஈழத் தமிழர் ஆதரவும் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களின் போராட்டங்கள் ஈழத் தமிழர்களின் துன்பங்களையும் வேதனைகளையும் வெளி உலகுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடித்துரைத்துள்ளன என்றும் பாண்டியன் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் இந்திய நாடாளுமன்ற தேர்தலின் போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி புதுடில்லியில் அமைக்கப்படும் என்றும் அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு வாய்ப்புக் கிட்டும் என்றும் பாண்டியன் தனது உரையில் மேலும் கூறினார்.

Tags: