
லண்டனில் நடைபெற்ற ஒரு கொடூரமான தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தேசிய அவசரகால குழுக் கூட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் கூட்டியுள்ளது.
Woolwich Manning blob from ITV News on Vimeo.
இந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று அழைக்கப்படும் அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலாக காவல்துறை பார்ப்பதாக பிபிசியின் அரசியல் பிரிவின் தலைவர் தெரிவிக்கிறார்.
பயங்கரவாத தாக்குதல்
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான வலுவான சான்றுகள் இருப்பதாக கூறியுள்ள பிரிட்டிஷ் பிரதமர் இத் தாக்குதல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வாள் போன்ற ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்திய இருவர் மற்றொருவரை தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். தாக்குதலின் பின் தாக்குதலுக்கு உள்ளானவரின் உடலை அருகில் இருக்கும் இராணுவ முகாமுக்கருகே வீசிச் சென்றுள்ளனர். கொல்லப்பட்டவர் ஒரு படை சிப்பாய் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்லாஹூ அக்பர் என்று கத்தியபடியே இரு நபர்கள் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் தாக்குதல் நடத்திய இருவரையும் சுட்டுள்ளனர். அந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தென் கிழக்கு லண்டனில் உள்ள உலிச் என்ற பகுதியில் இந்த தாக்கதல் சம்பவம் நடந்துள்ளது. – GTN





