சம்பந்தன், மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன்: விநாயகமூர்த்தி முரளிதரன்

muralitharan
எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

ஜனாதிபதியிடம் தான் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் முரளிதரன் இதனைத் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக சர்வதேசத்தின் உதவியை நாடுவதென்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழக்கமாக இருக்கின்றது.

சர்வதேசத்தின் தலையீட்டை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதன் பின்னர் அவர்களின் தலையீட்டிலிருந்து விடுதலை பெறுவதென்பது இலகுவான காரியமல்ல.

எனது சகோதரனையும் புலிகள் கொலை செய்தனர். அதற்காக நான் சர்வதேச விசாரணையை கோர முடியுமா? சர்வதேச தலையீடுகளால் என்ன நடக்கும் என்பதற்கு, இந்தியாவின் இலங்கை மீதான தலையீட்டால் எமக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் மிக சிறந்த உதாரணமாகும்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்றுக் கொள்வில்லையென்ற நிலைப்பாட்டையே ஆரம்பத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடித்தது.

அதன் பின்னர் வடக்கு கிழக்கு இணைக்கப்படும் வரை தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லையென தெரிவித்தனர்.

ஆனால் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டனர்.

தற்போது வட மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.

காலத்தின் தேவைக்கேற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது வரவேற்புக்குரியது.

அது போன்று சர்வதேச தலையீடு அவசியம் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டிலிருந்தும் மாற வேண்டும். ஏனென்றால் எமது பிரச்சினைகள் நாம் பேசித் தீர்மானித்துக் கொள்ள முடியும்.

இராணுவ மயமாக்கலை குறைக்க முடியும்.

குரோத மனப்பான்மையை வளர்த்தோமானால் எந்தப் பிரச்சினைக்கும் எம்மால் தீர்வுகளை காண முடியாது.

சம்பந்தன், மாவை ஆகியோரை எனது குருவாகவே கருதுகின்றேன். ஏனெனில் எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்தியவர்கள் அவர்கள். எனவே அவர்களை மதிக்கின்றேன்.

எனவே அரசுடன் பேச்சுக்களை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

Tags: , ,