சங்கீதக் கதிரை விளையாட்டில் பாடல் நின்றவுடன் கதிரையை நீக்கிவிட்டுச் செல்வது போன்று, அரசை விட்டு வெளியேறும் சித்து விளையாட்டில் எமது கட்சி ஈடுபடமாட்டாது. ஆனால் சில சக்திகள் அவ்வாறுதான் விரும்புகின்றன.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி, தம்பதெனிய, நிக்கவரெட்டிய தேர்தல் தொகுதிகளில் உள்ள சில கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசுக்கு வெளியிலிலிருந்து கொண்டு உரிமைகளுக்காக குரல் எழுப்புவதை விட எமது கட்சியினர் அரசுக்குள் இருந்து கொண்டே உரிமைகளுக்காகப் போராடுவது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
முஸ்லிம்களுக்கு எதிராக சில சிங்கள, பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் கிளர்ந்தெழுந்துள்ள நிலையில், உள்நாட்டு அரசியல் கட்சிகள் சில முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேற வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய ஒத்துழைப்பின் ஊடாக அரசு முக்கிய விடயங்களைச் சாதித்துக் கொண்டதும் எல்லோரும் அறிந்த செய்தியாகும்.
இவ்வளவும் செய்துவிட்டு நாங்கள் இந்த அரசை விட்டு வலிந்து வெளியேற முடியாது.
போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் தொடர்ந்து வெற்றிவிழா கொண்டாப்படுகின்றது.
ஆனால் போரின் பின்னர் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவில்லை என்பதை சர்வதேச சமூகம் சுட்டிக்காட்டுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாண கரையோரப் பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகள் பலவற்றை வெவ்வேறு காரணங்களைக் காட்டி ஆயுதப் படைகள் சுவீகரித்து வருவது ஆரோக்கியமானதல்ல.
அவ்வாறு கையகப்படுத்தப்படும் சில காணிகளில் சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் பள்ளிவாசல்களுக்கும், மத்ரஸாக்களுக்கும் சென்று உலமாக்களையும் முக்கியஸ்தர்களையும் விசாரணைக்காக இராணுவத்தினர் முகாம்களுக்கு வருமாறு கூறுவது விசனத்துக்குரியது.
பொலிஸாருக்கு உரிய விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
மதவாத, இனவாத தீவிர அமைப்புக்களின் செயற்பாடுகளை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருந்தால் நிலைமை இந்த அளவு மோசமாகியிராது.
பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இந்த விடயத்தில் அமைதி காக்கப்படுவதாக முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர் என்றார். -uthayan