சமாதானத்தை விரும்பும் தமிழர்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றே தேவையாகவுள்ளது. எனவே, நேர்மையான முறையில் நடந்துகொண்டு தீர்வை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
சுதந்திரம் என்பது நாட்டில் தவறான வழியில் கடைப்பிடிக்கப்படுகின்றது என்றும், ஜெனிவா தீர்மானத்தை நேர்மையான முறையில் அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதத்தை அவர் ஆரம்பித்து வைத்தார்.
சம்பந்தன் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
ஐ.நா. தீர்மானம்
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சரும் இந்தச் சபையில் இதற்கு முன்னர் கூற்றுகளை வெளியிட்டிருந்தனர்.
வட பிராந்தியத்தில் இராணுவத்தைக் குறைத்தல், தடுத்துவைப்பு தொடர்பிலான அரசின் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்தல், அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு, தகவல் அறியும் உரிமை, காணிப் பிரச்சினைக்கான தீர்வுப் பொறிமுறை, நீதித்துறையின் சுயாதீனம் ஆகிய விடயங்கள் மேற்கூறப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயங்களை நேர்மையான முறையில் அரசு நடைமுறைப்படுத்தவேண்டும்.
பொறுப்புக்கூறும் கடப்பாடு
இன்று இந்த நாடானது குழப்ப நிலையில் இருக்கின்றது. முன்பைவிட தற்போது பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. நாடு தற்போது எந்தத் திசை நோக்கிப் பயணிக்கின்றது? நல்லிணக்கத்தை அடையவேண்டுமானால், பொறுப்புக் கூறுவதற்குக் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.
இந்த நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ குந்தகத்தை ஏற்படுத்துவதற்காக நாம் இந்த விவாதத்தை முன்வைக்கவில்லை. இந்த நாட்டு மக்கள் அனைவரும் சுபீட்சமாக வாழவேண்டும் என்ற நோக்கிலேயே இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இலங்கையானது ஐ.நா. சபையிலும், மனித உரிமைகள் சபையிலும் அங்கம் வகிக்கும் நாடாகும். எனினும், மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அது ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு சிறந்த, சுவாரஸ்யமிக்க உதாரணம் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதாவது, இலங்கையுடன் சிறந்த உறவைப் பேணும் நாடுகளே தீர்மானத்தை ஆதரித்தன. இலங்கையின் 85 சதவீதமான ஏற்றுமதி இந்த நாடுகளிலேயே தங்கியுள்ளது.
சர்வதேச விசாரணை
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையானது சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கின்றது. போருக்கு முன்னரும் அதன் பின்னரும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஆணையாளர் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், அரசால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைக்கு என்ன நடந்தது? அதனை ஏன் அரசு பகிரங்கப்படுத்தவில்லை? திருகோணமலையில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்கின்றன என்று 2013 பெப்ரவரி மாதத்தில் ஜெனிவா சென்றிருந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
இப்போதாவது அது குறித்தான விசாரணைகள் தொடங்கிவிட்டன என நான் நினைக்கவில்லை. 7 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இந்த விடயத்துக்கு இன்னும் முடிவில்லை.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அது நடைபெற்று 10 நாள்களுக்கு உள்ளேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும். ஆனால், இது விடயத்தில் ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. உங்கள் அரசின் பொறுப்புக்கூறும் முறை இதுதானா? இதுதான் உங்களது வரலாறு.
கூட்டறிக்கை
போர் முடிவடைந்த பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கைக்கு வந்திருந்தார். அவர் ஜனாதிபதியுடன் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை விடுத்தார். அதில் பெறுப்புக்கூறும் விடயமும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதேவேளை, இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவானது இரு தரப்பினரதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
அரசின் கணிப்புப் பிழை
இலங்கை அரசின் மதிப்பீடுகளின்படி 3 லட்சம் பேர் தப்பிவந்தனர் எனக் கூறப்பட்டாலும், அதற்கு முன்னர் 4 இலட்சம் மக்கள் அந்தப் பகுதியில் இருந்தனர் என்று தமிழ் மக்களின் கருத்துகள் தெரிவிக்கின்றன. அரசு முறையான புள்ளி விவரத்தை வழங்கவில்லை.
தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகளை அழிப்பது மட்டுமன்றி, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நோக்கிலுமே கொடூரமான போர் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டது.
சமத்துவம், சுயநிர்ணயம் ஆகியன மறுக்கப்பட்டன. இன்னும் இந்த நாட்டில் ஒரு தவறான வழியில் சுதந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. பெரும்பான்மை நலனைக் கருத்திற்கொண்டே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஜனநாயகம் என்பது தமிழர்களுக்கு எதிராகவே இருக்கின்றது.
நிலைமை மோசம்
போர் முடிவுக்கு வந்தாலும் இப்போதைய நிலை முன்னரைவிட மோசமாகவுள்ளது. அரசியல் ரீதியாக எந்தவொரு அனுகூலமும் இல்லை; ஜனநாயகம் மதிக்கப்படுவதில்லை.
பல்லின சமூகமும் வாழும் இலங்கையில் ஜனநாயகம் என்பது முக்கியம். எனினும், ஏதோ ஓர் அடிப்படையில் தேர்தலை வெல்வதுதான் ஜனநாயகம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சட்டம், நீதி, இறைமை குறித்து பெரும்பாலானோர் இன்னும் உணரவில்லை.
இது குறித்து அரசியல் தலைமைகள் விளக்கமளிக்க வேண்டும். தமிழ் மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர். அவர்களுக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வொன்று தேவையாகவுள்ளது. எனவே, சாதகமான முறையில் நடந்து கொண்டு அரசு தீர்வை வழங்க வேண்டும் என்றார்.