இன்னும் 9 மாதங்கள்!

Cleaning-House-Clipart
அவன் நன்றாகவே களைத்துப் போய்விட்டான். சதா ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை… மனம் சலித்து விட்டது. மனைவி சொகுசாக வீட்டில் இருக்க. தான் மட்டும் ஏன் தினமும் வேலை வேலை என்று ஓடி மாடாய் உழைக்க வேண்டும். நான் தினமும் படும் அவஸ்தையை இவளும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமே அவனுள் மேலிட்டது. அவனுக்கு கடவுள் பக்தி அதிகம்.

இறைவனிடம் இறைஞ்சிக் கேட்டால் எதையும் அவன் அருளுவான் என்று திடமாகவே நம்பினான் இந்தப் பக்தன். எனவே இறைவனை வேண்டினான். விசித்திரமான வேண்டுதல் அது. நான் தினமும் 8 மணிநேரம் கடுமையாய் உழைக்கிறேன் ஆண்டவா. ஆனால் என் மனைவியோ வீட்டுக்குள்ளேயே காலத்தைக் கழித்து வருகின்றாள். அவளுக்கு என் வேலையின் கடினம் நன்றாகவே புரிய வேணடும் எல்லாம் அறிந்தவனே, எந்த வழியிலாவது எனக்கு உதவி செய் என்று மனம் உருகப் பிரார்த்தித்தான்.

இறைவனும் தன் பக்தனின் முறைப்பாட்டைக் காதில் போட்டுக் கொண்டான். தன் திருவிளையாடலை, அடுத்த நாள் தொடங்கிவிட்டான். காலையில் எழுந்தபோது, கணவன் பெண்ணாக உருமாறி விட்டான். அவன் மனைவியோ ஆணாக உருமாறி, தன்னைப் போல, வேலைக்குப் போவதற்குத் தயாராகிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது, அவனுக்குள் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. இறைவா போற்றி போற்றி என்று மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டு, வேலைக்குச் செல்பவருக்கு, காலை ஆகாரம் தயாரிப்பதில் மும்முரமானான். மனைவி வேலைக்குப் போய்விட்டதும், பிள்ளைகளை படுக்கையிலிருந்து எழுப்பினான்.

காலை உணவைத் தயாரித்து, உண்ணக் கொடுத்து, பின்பு அவர்களுக்கான மதிய போசனத்தை பெட்டிகளில் வைத்து ஆளாளுக்குக் கொடுத்தபின்பு, காரில் இரு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அழைத்துச் சென்றான்(ள்). வரும் வழியில் வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டான். அந்த மாதத்திற்குரிய தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம் ஆகியவற்றைக் கட்டி முடித்துவிட்டு, வீட்டிற்று தேவைப்படும் அவசிய பொருட்களை வாங்குவதற்காக, நகரின் மத்தியிலிருக்கும் விற்பனை நிலையம் பக்கம் போனான். வீடு திரும்பிய கையோடு, தன் செல்லப் பிராணிகள் பக்கம் அவன் கவனம் திரும்பியது. தினமும் பூனைக்குச் சாப்பாடு கொடுக்கும் பாத்திரத்தை நன்றாகக் கழுவித் துப்பரவாக்கிய கையோடு, வாலை ஆட்டிக் கொண்டு வந்த நாயைப் பிடித்து குளிப்பாட்டும் பணியைச் செய்ய வேண்டியிருந்தது. இதெல்லாம் முடிந்தபோது, பிற்பகல்; ஒரு மணியாகி விட்டது.

அவசரம் அவசரமாக, படுக்கை அறைக்குச் சென்று, படுக்கை விரிப்புகளைச் சரிசெய்தான். (பெண்ணாக உருமாறி விட்டாலும் நிஜத்தில் ஆண் என்பதால், ஆண் என்றே இவனை அழைத்துக் கொள்வோம்.). பின்பு தரையைத் துப்பரவாக்கும் பெரிய வேலை தொடங்கியது. ஒருவாறாக, சமையலறை உட்பட எல்லா அறைகளையும் துப்பரவு செய்து முடித்தான். இனி பள்கிக்குச் சென்ற பிள்ளைகளை வீட்டுக்குத் திரும்பி அழைத்து வரவேண்டாமா? அவசரம் அவசரமாக பிள்ளைகளை அழைத்து வந்தபோது, பிள்ளைகளோடு ஒருசில

விடயங்களுக்காக பிணங்க வேண்டியிருந்தது. ஓரு அம்மா ஸ்தானத்தில் தன்னை வைத்துக் கொண்டு, பொறுமையாக அவர்களை அவன் தன் வழிக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. கழுவிப் போட்ட உடுப்புகள் அவனுக்காகக் காத்திருந்தன. அவற்றை அயர்ன் பண்ணிக் கொண்டே, கொஞ்ச நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க அவனால் முடிந்தது. நேரம் மாலை 4.30ஆகி விட்டது. இரவுச் சாப்பாட்டுக்கு தயார் செய்தாக வேண்டும். எல்லாவற்றையும் தயார் செய்து, இரவுச் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டபின், பாத்திரங்களையும், சமையல் அறையையும் துப்பரவு செய்யும் வேலை தொடர்ந்தது.

ஒருவாறு முடித்துக் கொண்டு, படுக்கைக்குப் போகும் நேரம் இரவு 9.30. நன்றாகக் களைத்து விட்டான். என்றாலும் மனைவியுடன் உடலுறவு கொண்டான். அடுத்த கணமே தூங்கி விட்டான். காலையில் எழுந்த கையோடு, முதல் வேலையாக இறைவனைப் பிரார்த்தித்தான். இறைவா எனக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. நான் ஆணாகவே இருந்துவிட வரந் தந்துவிடு என்று மன்றாட்டமாகக் கேட்டான்.

எல்லாம் அறிந்த அந்த இறைவன் மெல்லப் புன்னகைத்தபடி பதிலளித்தான். பழையபடி நீ ஆணாக மாறிவிடலாம். ஆனால் நீ அதற்காக இன்னும் 9 மாதங்கள் பொறுத்தாக வேண்டும். காரணம் நீ இப்பொழுது தாயாகி இருக்கிறாய் என்றான் இறைவன் அமைதியாக!

-ஏ.ஜே.ஞானேந்திரன், பாசல் சுவிஸ்.

Tags: , ,