தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம்

tamileelam
தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.

2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக கருதப்படுவதோடு ஆயிரக்கணக்கான தமிழீழத் தாயக மக்கள் தங்கள் கருத்துக்களை இச்சாசன உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளமை உணர்வெழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் முரசறைவு அமைந்திருந்த சமவேளை கனடா, பிரித்தானியா, பிரான்சு என பல்வேறு இடங்களில் ஒன்றுகூடிய தமிழீழ உணர்வாளர்கள் முரசறைவின் போது உணர்வெழுச்சியோடு கூட்டிணைந்து நின்றனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (தமிழகம்)பிரதிநிதி பேராசிரியர் சரசுவதி அவர்கள் முரசறைவின் முன்னுரை வழங்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வரலாற்று ஆவணமாகிய தமிழீழ சுதந்திர சாசனத்தினை வாசித்து முரசறைந்தார்.

முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனமானது நிகழ்வுபூர்வமான தமிழீழ தேசத்தின் நிலைப்பாடுகள் முதலில் விபரித்திருந்தோடு வெளியுறவு , பொருண்மியம் , மொழி , கல்வி , மருத்துவம் – உடல்நலன்சார் , மேம்பாடு , சுற்றுபுறச்சூழல் , குடியுரிமை ஆகியனவற்றின் தமிழீழ தேசத்தின் கொள்கை நிலைப்பாட்டினை உள்ளடக்கியிருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்சநிகழ்வாக அமைந்திருந்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு நிகழ்வில் தென்சூடானிய விடுதலை இயக்கத்தின் பிரதிநிதி Daniel Mayan, வங்கதேச விடுதலை இயக்க பிரதிநிதி Dr.Nabibulla , அமெரிக்காவின் முன்னாள் சட்டாஅதிபர் (நா.தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்) Ramsay Clarke, பேராசிரியர் Francis Boyle நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் தணிகாசலம் தயாபரன்ஆகியோர் உரைகளை வழங்கியிருந்தனர்.

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு கடந்த 15ம் நாள் முதல் இடம்பெற்றிருந்த முரசறைவு மாநாட்டில் தமிழர்கள் மற்றும் தமிழரல்லாத பல்வேறு துறைசார் ஆளுமையாளர்கள் பலர் பங்கெடுத்திருந்ததோடு 20க்கும் மேற்பட்ட ஆய்வுகள் சமர்பிக்கப்பட்டிருந்தன. பல்வேறு தலைப்புக்களில் விவாதங்களும் கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றிருந்தன.

முரசறையப்பட்டுள்ள தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெரிவித்திக்கையில் :

இத் தமிழீழ சுதந்திர சாசனம் தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பதற்கு அடிப்படையாக அமையக்கூடிய ஆவணமாக அமையும். தமிழீழம் எத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கப் போகிறது? எத்தகைய கொள்கைகiளைக் கடைப்பிடிக்கப் போகிறது? போன்றவற்றை நாம் இந்த சுதந்திர சாசனம் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளோம். உதாரணமாக தமிழீழத்தின் வெளியுறவுக் கொள்கை ஜனநாயக நாடுகளுடன் கூடுதல் நட்புறவைக் கொண்டதாக அமையும் என்பதனையும் இந்தியாவினை தமிழீழம் நட்பு நாடாகக் கொள்ளும் எனவும் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைந்துள்ளது. இது போன்று நிலைப்பாடு, கொள்கை சார்ந்து பல்வேறு விடயங்களை தமிழீழ சுதந்திர சாசனம் தெளிவுபடுத்தயுள்ளது. இதனால் ஒரு தொலைநோக்குடன் தமிழீழத்துக்கான ஆதரவை வென்றெடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதங்கு தமிழீழ சுதந்திர சாசனம் துணைசெய்யும். அரசுகளின் ஆதரவினை வென்றெடுப்பதற்கு முதற்படியாக பல்வேறு நாடுகளிலும் வாழும் குடியியில் சமூகத்தின், அறிவியல் சமூகத்தின் ஆதரவினை நாம் தமிழீழத்துக்கு வென்றெடுப்பதில் தமிழீழ சுதந்திர சாசனம் காத்திரமான பங்கை வழங்கும் என்பது நமது நம்பிக்கை என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

செய்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (Media TGTE)

Tags: ,