சான் காங்-காங்

jackie-chan
”ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று ஓர் ஆண் குழந்தை கொழுகொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். தாய் லீ-லீ வீட்டு வேலை செய்யும் பெண்.

பிரசவம் பார்த்த டாக்டர், அந்தக் குடும்பத்தின் நிலைமையையும் குழந்தையின் அழகையும் பார்த்து, தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழைப் பெற்றோர் மறுத்து விட்டனர். அந்தக் குழந்தைக்கு சான் காங்-காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு ஹாங்காங்கில் பிறந்தவன் என்று அர்த்தம்.

இந்த நிலையில் பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. சாசனா என்ற நாடகப் பள்ளியில் காங்-காங் சேர்ந்தான்.

தனது ஏழாவது வயதிலேயே கராத்தே, குங்ஃபூ என மார்ஷியல் கலைகள் அனைத்தும் கற்றான்.

அவன் தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தான். எட்டு வயதில் ‘பிக் அண்ட் லிட்டில் வாங்ஷன்’ என்ற படத்தில் முதன்முதலாக நடித்தான். அவனுடைய 18 வயதில் புரூஸ் லீ நடித்த ‘என்டர் தி டிராகன்’ படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டன்ட் நடிகர்கள் தயக்கம் காட்ட, காங்-காங் உடனே ஓடி வந்து குதித்து புரூஸ் லீயைக் கவர்ந்தான்.

அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காததால், கட்டட வேலைகளில் உதவியாளராகக் கூலி வேலை செய்தார். தினக் கூலியாக வேலைபார்த்தாலும், இவரது துறுதுறுப்பையும், துள்ளலையும், உருவத்தையும் பார்த்து சக தொழிலாளர் ஒருவர் ‘லிட்டில் ஜாக்’ என்று அழைத்தார். இதுவே பின்னர் ‘ஜாக்கி’ ஆனது.

ஹாங்காங்கில் இருந்து ஒரு தந்தி வர, ஜாக்கி சான் என்ற புதிய பெயருடன் புறப்பட்ட இவர், ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’ என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று முதல் அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது.

அந்த ‘கூலித் தொழிலாளி’தான் ஜாக்கிசான்!”

- ஹெச்.பாஷா, சென்னை-106

Tags: , ,