”ஏழு மாசத்துல பொறந்த இது பொழைக்காது… எதுக்கு இன்னும் வீட்டுக்குள்ள வெச்சுக்கிட்டு வேடிக்கை பாக்கணும்? மூச்சு அடங்கற மாதிரி இருக்கு. நேரத்தோட பொதச்சுட்டு, மத்த வேலயப் பாருங்க.”
”வேண்டாம் அவசரப்படாதீங்க…” – ஓடி வந்து அந்த பிஞ்சை அள்ளிக் கொண்டாள் ஒரு பெண்.
மரப்பாச்சி பொம்மைபோல, மூச்சு விடவே பலமில்லாத வகையில் பிறந்தது அந்த உயிர். அது, குறைமாதக் குழந்தைகளுக்கு ‘இன்குபேட்டர்’ வசதி இல்லாத காலம். அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பார்த்தபின்… மண்ணைத் தோண்டி புதைத்துவிட்டு, வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விடும் கிராமத்துப் பச்சை மனிதர்களுக்கு நடுவில், ஓர் அன்பு தெய்வம் அக்குழந்தைக்கு உயிர்ப் பிச்சை கொடுத்தது!
”வயித்துல சுமந்து பெற்ற தாயைவிட, நான் என் முதல் தாயா நினைக்கறது அவங்களதான். என் வாழ்வை துவக்கி வைத்த, என் வாழ்க்கையில மிகமுக்கியமான பெண் அவங்கதான்!”
அந்த முதல் தாய்… டாக்டர் சாரா! ஏழு மாதத்திலேயே பிறந்த அந்த சிசு… இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரைப்பட இயக்குநர் மகேந்திரன்!