“பீட்ஸா”, “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படங்களை தொடர்ந்து வித்தியாசமான, அதேநேரம் வெற்றிபெறும் கதையம்சம் உடைய படங்களிலேயே நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு, அடுத்து வெற்றித்தேடித்தர வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம்தான் “சூதுகவ்வும்”.
அதிகாரத்தில் கை வைத்தல் கூடாது, அடி உதை கூடாது… உள்ளிட்ட ஐந்து விதிமுறைகளுடன் சொற்ப, அற்ப தொகைகளுக்காக ஆள் கடத்தும் பேர்வழி விஜய் சேதுபதி. ஒரு ஓட்டை காருடனும், ஒன்றுக்கும் உதவாத உட்டாலங்கடி ஐடியாக்கள் தரும் கற்பனை காதலியுடனும் (மனப்பிராந்தி.?!) கடத்தல் அசைன்மெண்ட்டுகளில் அடுத்தடுத்து சொதப்பும் விஜய்யுடன் வந்து இணைகின்றனர், நடிகை நயன்தாராவுக்கு கோயில் கட்டியதால் ஊரை விட்டு துரத்தப்படும் சிம்ஹா, தான் வேலைபார்க்கும் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்த ஜாகுவார் காரை ஓட்டிபார்க்கும் ஆசையில் வெளியில் எடுத்து வந்ததால் வேலை இழக்கும் ஸ்டார் ஹோட்டல் கார் பார்க்கர் டிரைவர் ரமேஷ், இவர்களது சாப்ட்வேர் நண்பர் அசோக் ஆகியோர். ஒரு அசாதாரண சூழலில் இந்த நால்வரும் இணைந்ததும் இவர்கள் வசம் நேர்மையான நிதி அமைச்சர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனை கடத்தும் காஸ்ட்லீ வேலை ஒன்று ஒப்படைக்கப்படுகிறது. அதிகாரத்தில் கை வைக்கக்கூடாது எனும் ஐந்து விதிமுறைகளில் ஒன்றையும் சற்றே ஓரம் வைத்துவிட்டு அமைச்சரின் மகனை கடத்துகின்றனர்.
அமைச்சரின் மகன் இவர்கள் நால்வரையும் காட்டிலும் பெரிய தில்லாலங்கடி. தன் நேர்மை அப்பாவிடம் இல்லாத பணத்தை, அவரது ஆளுங்கட்சி நிதியிலிருந்து மூன்று கோடியாக அவர் கறக்க போடும் கடத்தல் பிளானில் இருந்து விஜய் சேதுபதி அண்ட் கோவினரால் அது இரண்டு கோடியாக குறைந்த வருத்தம். அதில் ஒரு கோடி அந்த நால்வருக்கும் ஷேராக போகப்போகும் வருத்தம் உள்ளிட்டவைகளால் கடுப்பில் இருக்கும் அவர், தன்னை கடத்தும் வாகனத்தை கவிழ்த்து விட்டு அந்த சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இவர்களிடமிருந்து 2 கோடியுடன் எஸ்கேப் ஆகிவிடுகிறார். அந்த விபத்தில் தன் கற்பனை காதலியையும் பறி கொடுக்கும் விஜய்யும், அவரது கூட்டாளிகளும் அமைச்சரின் பெருமுயற்சியால் திண்டுக்கல்லில் இருந்து இவர்களுக்காகவே ஸ்பெஷலாக வரும் என் கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டிடம் சிக்குகின்றனர். நால்வரும் கொல்லப்பட்டனரா? விதியால் வெல்லப்பட்டனரா..? என்பதும், விபத்தில் இறந்த விஜய்யின் கற்பனை காதலி மீண்டும் வந்தாரா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வத்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது “சூது கவ்வும்” திரைப்படத்தின் மீதிக்கதை!
ஹாட்ரிக் ஹிட் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் என்பதை விட, ஹாட்ரிக் ஹிட் ஹீரோ எனும் புதிய அத்தியாயத்தை சமீப காலத்தில் உருவாக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி என்பதே பொருந்தும். 50 ப்ளஸ் நாயகர்கள் எல்லாம் 25 இளைஞர்களாக மரத்தை சுற்றி டூயட் பாடிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில், மனிதர் 40 ப்ளஸ்., பாத்திரத்தில் நரைமுடியும், எண்ணெய் வழியும் முகமாக விஜய் சேதுபதியா இது என கேட்கும் அளவிற்கு என்னமாய் ஜொலித்திருக்கிறார்? ஆள் கடத்தல் தொழில் அவ்வளவு ரிஸ்க் இல்லை… இந்த 5 விதிமுறைகளை பின்பற்றினால்… என அவர் கடத்தல் கிளாஸ் எடுக்கும் விதமாகட்டும், கடத்தப்பட்டவருக்கு ஒரு சின்ன ஷேர் தருவதிலாகட்டும், கற்பனை காதலி சஞ்சிதா ஷெட்டியுடன் கொஞ்சி குலாவுவதில் ஆகட்டும் வாவ் என வாய் பிளக்க வைக்கிறார் விஜய்!
கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி கற்பனை காதலி என்றாலும் கலக்கல் காஸ்டியூமில் விஜய் பகுதியை மட்டுமல்ல, படம் பார்க்கும் ரசிகர்களையும் கற்பனை உலகில் மிதக்க வைப்பது படத்தின் பக்க(கா) பலம்!
அமைச்சரின் வாரிசு அருமை பிரகாசமாக வரும் கருணாகரன், பகலவன் – சிம்ஹா, சேகர்-ரமேஷ், கேசவன்-அசோக் செல்வன், என்கவுண்டர் போலீஸ் அதிகாரி பிரம்மா – யோக ஜெஸ்ஸி, டாக்டர் தாதா – அருள்தாஸ், நிதியமைச்சர் ஞானோதயம் – எம்.எஸ்.பாஸ்கர், முதல்வர் – ராதாரவி, கான்ஸ்டபிள் – வெங்கடேஷ், டி.ஐ.ஜி – பாய்ஸ் ராஜன், நம்பிக்கை கண்ணன், சிவக்குமார் உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும், அதில் பங்கேற்று நடித்திருப்பவர்களும் “சூது கவ்வும்” படத்தின் பெரும் பலம்!
“என்ன பண்ணப்போறோம்னு தெரியாம சென்னைக்கு வர்றவன்தான் சாதிக்கிறான், பிளானோடு வர்றவன் ஊருக்கே போயிடுறான்…” , “நாளைக்கு சண்டே, நாங்க ஒர்க் பண்ண மாட்டோம்… பணத்தை திங்கட்கிழமை கொண்டு வாங்க…” உள்ளிட்ட காமெடி கலர்புல் வசனங்களும், கடத்தப்படுபவரின் பெற்றோர் அல்லது உறவினரின் மாத சம்பளம் எவ்வளவு எனக்கேட்டு அந்த சம்பளத் தொகையையே பிணையத் தொகையாக கேட்டு வாங்குவதும், அதில் ஒரு ஷேரை கடத்தப்பட்டவருக்கு டிப்ஸாகத் தருவதும் செம காமெடி என்றால், கற்பனை காதலி, சினிமா எடுக்கும் டாக்டர் ரவுடி, நம்பிக்கை கண்ணன் எனும் பெயர் உடையவரின் நம்பிக்கை மோசடி, சுருள்முடி தாதாவை பிச்சைக்காரன் என நினைத்து விஜய் சேதுபதி சில்லறை இல்லை என்பதும் அதற்கு அவர் தலையை பிய்த்துக் கொண்டு திரிவது உள்ளிட்ட ஓவ்வொரு கேரக்டரும் தியேட்டரே அதிரும் சிரிப்பு வெடிகள்.
கானா பாலாவின் “காசு, பணம் டப்பு, மணி… மணி…” பாடல், சந்தோஷ் நாராயணனின் இசையில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் ர(ரா)கம்! தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, லியோ ஜான்பாலின் படத்தொகுப்பு உள்ளிட்டவைகள் நலன் குமாரசாமியின் எழுத்து இயக்கத்தில் “சூதுகவ்வும்” படத்திற்கு வெற்றி மகுடம் சேர்த்திருக்கின்றன. பலே, பலே!!
மொத்தத்தில், “சூது கவ்வும்” – “வசூல் வெல்லும்!”