நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுத்தல், கைத்தொலைபேசி பாவனை, ஒளிப்பதிவுக் கருவிகள், புகைப்படக் கருவிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆலய உள் வீதியில் இவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அம்பாள் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்ற போது இவ்வாறு தீர்மானம் தீர்மானிக்கப்பட்டது.
பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீஷன் தலைமையில் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அறங்காவல் சபைத் தலைவர் ப.க.பரமலிங்கம், சபை உறுப்பினர்கள், நயினாதீவு படகு உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள், பொதுசுகாதார பரிசோதகர், கிராம அலுவலர்கள், தொண்டர் அமைப்புக்களின் பிரநிதிகள், கடற்படை, பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
திருவிழாக்கால பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸார் கடற்படையினருடன் தொண்டர்களும் இணைந்து கடமையாற்ற வேண்டும். குறிகாட்டுவான் நயினாதீவு துறைமுகங்களில் கிராம அலுவலர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
திருவிழா ஆரம்பமாகும் தினம் முதல் முடிவுறும்வரை துறைமுகத்தில் இருந்து ஆலயம் வரை இரு வழிப்பாதைகளாக மக்கள் செல்லக் கூடியதாக ஏற்பாடு செய்வதன் மூலம் துறைமுகப் பகுதியில் நெருக்கடிகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
போக்குவரத்தில் இருபத்து ஐந்து படகுகள் தினமும் சேவையில் இருக்கும். 12 ஆம் திருவிழாவின் பின்னர் கூடுதல் படகுகள் சேவைகள் இணைக்கப்படும். படகுக் கட்டணம் வழமை போன்று ஒரு பயணிக்கு 30 ரூபா வீதம் அறவிடப்படும்.
திருவிழாக் காலங்களில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை படகுச் சேவைகள் இடம்பெறும். 12 ஆம் திருவிழாவின் பின்னர் மக்கள் கூடுதலாக வருகை தருவார்கள் என்பதால் மக்களின் வரவைப் பொறுத்து இரவு சேவை மேலும் நீடிக்கும்.
தேர், தீர்த்தத் திருவிழாக்களின்போது அதிகாலை 4 மணிக்கு படகுச் சேவைகள் ஆரம்பமாகும்.
தனியார் பஸ்கள் மாலை 5.30 மணிக்குப் பின்னரும் குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு ஆலயத்தில் இருந்து வரும் மக்களை யாழ்.நகர் செல்லக் கூடியதான போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
போட்டி போட்டு ஓடுதல், தரிப்பிடங்களில் நிற்கும் மக்களை வலுக்கட்டாயமாக ஏற்றுதல் போன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இ.போ.ச. உத்தியோகத்தர்கள் கூட்டத்தில் சமூகமளிக்காததால் இ.போ.ச. பஸ் சேவை குறித்து அவர்களுடன் தொடர்புகொள்ளப்படும் எனவும் பிரதேச செயலர் திருமதி ச.மஞ்சுளாதேவி தெரிவித்தார்.
சுகாதார சேவைகள் வழமை போன்று இறுக்கமாக இருக்கும். உணவு நிலையங்கள் மக்களின் சுகாதார விடயத்தில் உரிய கவனம் எடுக்க வேண்டும். பாதுகாப்பான குடிதண்ணீர் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பிரதேச சபையும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து செயற்பட்டு இதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
வியாபார நிலையங்கள் பிரதேச சபையின் அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும். வர்த்தகச் செயற்பாடுகளில் சிறுவர்களை அமர்த்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டது.