கனடாவில் மார்க்கம் நகரில் உள்ள வீதி ஒன்றிற்கு வன்னி தெரு என்னும் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கான திறப்புவிழா, மார்க்கம் நகரசபை மேயராலும், 7ஆம் வட்டார உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்களின் முயற்சியிலும், ஏனைய உறுப்பினர்களாலும் நேற்று காலை 10 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.
இந்த வீதியானது புதிதாக நிர்மானிக்கப்பட இருக்கும் சமூக நிலையத்தற்கு செல்லும் பாதையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
“வன்னி றோட்” என்ற பெயரினைச் சூட்டும் நிகழ்வு டெனிசன் வீதியிலுள்ள “அமடேல்” சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
வைபவத்தில் மார்க்கம் மேயர் பிராங்க் ஸ்காபிற்றி உரையாற்றுகையில்,
கனடாவில் வன்னி என்னும் தமிழ் பெயரில் திறக்கப்படும் முதல் வீதி இதுவாகும்.
அத்துடன் கனடாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த ஏனைய நாட்டு மக்களைப் போலவே ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழ் மக்களாகிய நீங்களும் உங்கள் நாட்டை விட்டுப் பிரிய மனமில்லாமலே கனடாவுக்குப் புலம் பெயர்ந்து வந்துள்ளீர்கள்.
கனடாவுக்கு வரும் மக்களை பாகுபாடு எதுவுமே இன்றி வரவேற்று, மதிப்பளிப்பதில் எமது மார்க்கம் நகர சபை முன்நிற்கின்றது.
உங்கள் தாயகத்தை நினைவுறுத்தும் வகையில் 14ஆவது அவெனியூவிலுள்ள வீதிக்கு வன்னி றோட் என்ற பெயரினைச் சூட்டுவதில் நாம் பெருமை அடைகின்றோம்.
நீங்கள் தினமும் 14ஆவது அவெனியூவின் ஊடாகச் செல்லும் போது வன்னி வீதியை பார்க்க முடியும் என்றார்.
இதேவேளை, வரவேற்புரை நிகழ்த்திய லோகன் கணபதி உரையாற்றிய போது,
மார்க்கம் மாநகர் கனடாவில் மாத்திரமல்ல உலகிலேயே சிறந்த மாநகராகத் திகழ்கின்றது. இங்கு அதிகளவு தமிழ் மக்களும் தென் ஆசிய மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
அதனால் இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி மாதத்தினை தமிழ் மக்களின் பாரம்பரிய தினமாக முதன் முதலில் பிரகடனப்படுத்திய பெருமை எமது மார்க்கம் மாநகர சபைக்கு உண்டு.
அது போலவே கடந்த மூன்று தசாப்த காலமாக தமிழ் மக்களுக்கு அபயமளித்து வந்த சரித்திரப் பிரசித்தி வாய்ந்த வன்னி மாநகரின் பெயரினை இங்குள்ள வீதிக்கு சூட்டுவதற்கு உதவிய மார்க்கம் மேயருக்கும் ஏனைய அங்கத்தவர்களுக்கும் மற்றும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.
எனினும் இலங்கையில் தமிழர் தாயகப்பகுதிகளில் உள்ள வீதிகளில் பல சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் புலம் பெயர் நாட்டில் வாழ்கின்ற தமிழர்களின் முயற்சியால் அங்கு தமிழ் பெயர்களைக் கொண்ட வீதிகள் திறக்கப்பட்டு வருகின்றமை ஆச்சரியம் தான்.
-uthayan