சேக்ரமென்டோ: அமெரிக்காவில் சிகரெட் பழக்கத்தை நிறுத்த நினைத்த பெண், மாற்றி யோசித்து சிறை சென்றுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சேக்ரமென்டோ கவுன்டியை சேர்ந்தவர் எட்டா மயி லோபஸ். சிகரெட் பழக்கத்துக்கு அடிமையான லோபஸ், அதை கைவிட எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டார்.
எனினும் பலன் அளிக்கவில்லை. கடைசியில் சிகரெட்டை கைவிடுவதற்கு ஒரு திட்டம் வகுத்தார். இதற்காக சேக்ரமென்ட் கவுன்டி ஷெரீப் போலீஸ் அலுவலகத்துக்கு கடந்த வியாழக்கிழமை சென்றார். அங்கு வெளியில் காத்திருந்தார். ஒரு நாள் முழுக்க காத்திருந்தார். மாலையில் அலுவலகத்தில் இருந்து போலீஸ் துணை அதிகாரி மட் கேம்போய் வெளியில் வந்தார்.
பரபரப்பு அடைந்த லோபஸ் அவர் அருகில் சென்றார். போலீஸ் அதிகாரி என்ன, ஏது என்று கேட்பதற்குள் அவர் கன்னத்தில் பளார்என்று அறைந்தார். அதிர்ச்சி அடைந்த அதிகாரி, லோபசை கைது செய்தார். விசாரணையில், சிகரெட் பழக்கத்தை என்னால் விட முடியவில்லை. அதனால் ஏதாவது குற்றம் செய்து விட்டு சிறை செல்ல நினைத்தேன். சிறைக்குள் சிகரெட் பிடிக்க அனுமதி இல்லை. அதனால் சிகரெட் பழக்கம் போகும் என்று திட்டமிட்டேன்என்று லோபஸ் கூறினார்.
அதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த அதிகாரி, லோபஸ் மீது வழக்கு பதிவு செய்தார். அவர் நினைத்தபடியே நீதிபதியும் 63 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.