ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்த் நகரில் ‘சூரஜ் சங்கல்ப் யாத்திரை’யை துவக்கி வைத்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
எதிர்க்கட்சிகளை ஒடுக்க சி.பி.ஐ.யை ஆயுதமாக பயன்படுத்த மத்திய அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. மைனாரிட்டியாக உள்ள காங்கிரஸ் அரசு, சி.பி.ஐ.யை தவறான பயன்படுத்துவதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள நினைக்கிறது.
பலவீனமான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம்.
ராவணனை ராமர் கொன்றது போல் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழி வகுக்காத காங்கிரஸ் ஆட்சியை, ஊழலே கொன்று விடும். மக்களிடையே நம்பகத் தன்மையை இழந்து விட்ட காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான திட்டமிடல் மற்றும் தவறான பொருளாதார கொள்கையினால் விலைவாசியும், பண வீக்கமும் உயர்ந்து கொண்டே போகின்றன.
வாஜ்பாய் ஆட்சியின் போது ஊழலை எதிர்த்து போராடி, அணு ஆயுத சோதனை நடத்தி நாடு முன்னேற்றப் பாதையில் நடைபோட்டது. பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற மத்திய-மாநில அரசுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாராட்டை பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.