டென்மார்க்கில் பரபரப்பு முதியவர் வீட்டு ப்ரிட்ஜில் 30 நாய் உடல்கள் மீட்பு

dogs
கோபன்ஹேகன், டென்மார்க்கில் தனியே வசித்து வந்த முதியவரின் வீட்டு குளிர்சாதன பெட்டியில் 30 நாய்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க்கின் வடக்கு பகுதியில் டோயரிங் நகரில் ஒரு வீட்டில் இருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் அடிக்கடி கேட்டு வந்தது. இது இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, அந்த வீட்டில் தனியே வசித்து வரும் 66 வயது முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அக்கம்பக்கத்தினரின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக அவருக்கு கோர்ட்டில் கடந்த மாதம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து நாய்கள் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அபராதம் செலுத்த அவர் மறுத்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து மீண்டும் நாய் குரைக்கும் சத்தம் கேட்பதாக அக்கம்பக்கத்தினர் 2 நாள் முன்பு புகார் கூறினர்.

இதுபற்றி விசாரிப்பதற்காக போலீசார் நேற்று முன்தினம் சென்றனர். வீடு பூட்டியிருந்தது. இதையடுத்து, பிரத்யேக வாரன்ட் பெற்ற போலீசார், பூட்டை உடைத்து சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த 4 நாய்கள், ஒரு பாம்பை மீட்டனர். வீட்டில் வேறு எங்காவது விலங்குகளை முதியவர் அடைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகம் இருந்ததால், வீடு முழுக்க தீவிர சோதனை நடத்தினர். குளிர்சாதன பெட்டியின் ப்ரீசரை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில் நாய்களின் உடல்கள் திணிக்கப்பட்டிருந்தன. 25 நாய்க் குட்டிகள் உள்பட 30 நாய்களின் உடல்களை ப்ரீசரில் இருந்து மீட்டனர்.

நாய்கள் எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. செல்ல பிராணிகளை பிரிய மனமில்லாததால் ப்ரீசரில் வைத்தாரா, அவரே அடித்து கொன்றாரா, அவர் சைக்கோவா என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி முதியவரை தேடி வருகின்றனர். அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை. இச்சம்பவம் டென்மார்க்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: , ,