வஸந்த் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கும் திரைப்படம் “மூன்று பேர் மூன்று காதல்”. வருண் எனும் விமல், அஞ்சனா எனும் லாசினியை விழுந்து விழுந்து காதலிக்கிறார்.
ஒருகட்டத்தில் லாசினிக்கு ஏற்கனவே ஒரு காதலர் இருப்பதும், அவர்களுக்கு இடையேயான ஈகோவால், அவர்களது நிச்சயதார்த்தம் முறிந்து போய் இருப்பதும் விமலுக்கு தெரியவருகிறது. அது தெரிந்தும் விமல், லாசினியுடன் திருமணத்தை நோக்கி போகிறார். இந்நிலையில் வேறு ஊரில் மக்களுக்கு சேவை செய்வதற்காக குணா எனும் சேரனும், மல்லிகா எனும் முக்தா பானு(“தாமிரபரணி” பானு தான்…)வும், தங்களது காதலை தியாகம் செய்த கதையும்., தன் நீச்சல் வீராங்கனை காதலி திவ்யா எனும் சுர்வின், நீச்சலில் உலக சாதனை செய்வதற்காக அவரது காதலர் கம் நீச்சல் கோச்சர் ஹாரிஸ் எனும் அர்ஜூன் உயிர் தியாகம் செய்ய துணிந்த கதையும், அவரது காதலி நீச்சலில் உயிரையே துறந்த கதையும், விமலின் காதுக்கும் கவனத்திற்கும் வருகிறது. இவரும் சுயநலமான தனது காதலை தியாகம் செய்துவிட்டு, தன் தியாக காதலையும் சேர்த்து மூன்று பேர் மூன்று காதல் என்ற புத்தகம் போட்டு இலக்கியவாதியாவதும், அந்த புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அர்ஜூனை அழைப்பதும் தான் “மூன்று பேர் மூன்று காதல்” படத்தின் கரு, கதை, களம் எல்லாம்.
அர்ஜூன், விமல், ரித்விக் வருண் (டைரக்டர் வஸந்த்தின் வாரிசு), முக்தாபானு, சுர்வின், லாசினி, தம்பிராமையா, அப்புக்குட்டி, சத்யன், ஜான் விஜய், “ஆடுகளம்” நரேன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இனிதாக இசையமைத்திருக்கிறார், போஜன் கே.தினேஷ் திறம்பட ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நா.முத்துக்குமார் நல்ல அர்த்த புஷ்டியான பாடல்களை எழுதியிருக்கிறார். மகி அழகாக கலை இயக்கம் செய்திருக்கிறார். எஸ்.என்.பாஸில்வுடன், எஸ்.எம்.வஸந்தும் அமர்ந்து படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்!
ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் “கேளடி கண்மணி”, “ஆசை” படங்களின் இயக்குனர் வஸந்த், இன்னமும் தலையணையில் மூச்சுகாத்து பிடிக்கும் காலத்திலேயே இருப்பதால் “மூன்று பேர் மூன்று காதல்”, “முந்நூறு பேர் மூவாயிரம் காதலாக” இருக்கிறது, இழுக்கிறது!
இயக்குனர் வஸந்த், எஸ்.எம்.வஸந்த் ஆக மாறியது மாதிரி அவரது இயக்கத்திலும் நிறைய மாற்றங்கள் தேவை!
ஆகமொத்தத்தில், “மூன்று பேர் மூன்று காதல்” படத்தை, “முடிந்தால், முடிந்தவரை பார்”க்கலாம்!