திருச்சி: அக்னி நட்சத்திர வெயில் காரணமாக, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுகிறார்.
மரக்காணம் கலவரம் தொடர்பாக, விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினர், 520 பேர், கைது செய்யப்பட்டு, கடந்த, 1ம் தேதி அதிகாலை, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
விழுப்புரம் நீதிமன்றம் ராமதாசுக்கு ஜாமின் வழங்கிய போதும், 2012ம் ஆண்டு மற்றும் தற்போது நடந்த மாமல்லபுரம் சித்திரை திருவிழாவில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போல பேசியதற்காக, ராமதாஸ் மீது மேலும், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்விரு வழக்குகளில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து, மதுரையில், ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கு, கூடங்குளம் இடிந்தகரையில் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்குகளில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.பா.ம.க., தலைவர் மணிக்கு, விழுப்புரம் நீதிமன்றம், ஜாமின் வழங்கிய போதும், மாமல்லபுரம் சித்திரை திருவிழா தொடர்பாக, அவர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார்.
* தயிர் சாதம் சாப்பிடும் ராமதாஸ்:திருச்சி மத்திய சிறையில் உள்ள பழைய மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமதாசுக்கு, முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது. காலையில் எழுந்தவுடன், தினசரி பத்திரிகைள் மற்றும் வாரப் பத்திரிகைகள் படிக்கிறார்.
காலை உணவாக, சப்பாத்தியுடன் குருமா சாப்பிடுகிறார். திருச்சியில் அக்னி நட்சத்திர வெயில் கடுமையாக இருக்கிறது. இதனால், மதிய உணவாக, ரசம் மற்றும் தயிர்சாதம் மட்டுமே விரும்பி சாப்பிடுகிறார். மாலையில் சிறை முன், சற்று நேரம் உலாவுகிறார். ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் குறித்து அவரே சோதித்துக் கொள்கிறார். ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அதிகமாக இருந்தால், சிறையில் உள்ள மருத்துவக்குழுவிடம் உரிய சிகிச்சை மேற்கொள்கிறார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சிறையில் உள்ளவர்களின் குழந்தைகள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், பார்வையாளர்கள் யாரும் ராமதாசை சந்திக்கவில்லை.