அஸாத்சாலிக்கு 90 நாள் தடுப்புக்காவல்

assathsali
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளருமான அஸாத் சாலி 90 நாட்கள் தடுப்புக் காவல் விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக ஸ்ரீ வர்த்தன தெரிவித்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது மீண்டும் 4ஆம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வியாழனன்று காலை 7.30 மணியளவில் கொலன்னாவையிலுள்ள தனது உறவினர் வீடொன்றில் தங்கியிருந்த போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அஸாத் சாலி மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 120ஆம் இலக்க 2(ஊ) பிரிவிற்கு அமைய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தொடர்வதாக குற்றப்பிரிவினர் தெரிவித்தனர்.

இனவாதம், இனங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக செயற்படல், ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கலாக பல குற்றச்சாட்டுகள் பயங்கர வாத தடுப்புச்சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவைக்கமைவாக அஸாத்சாலி மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழன் காலை 8.00 மணிமுதல் சனி காலை 8.00 மணிவரை 48 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளை எதிர்கொண்ட அஸாத் சாலி அதன்போது உண்ணாவிரதம் அனுஷ்டித்து வந்தார். இந்நிலையில் 30 மணித்தியாலங்கள் மேலாக உணவு, நீர் எதனையும் உட்கொள்ளாது அஸாத் சாலி உடல் நலக் குறைவுக்கு உட்பட்டு மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 48 மணித்தியாலங்களில் உறவினர் உட்பட எவரையும் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படாத அஸாத் சாலி தற்போது மேலதிக விசாரணைகளுக்கு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரியவரும் நிலையில் மேலதிக அவசியமான விசாரணைகளுக்காகவே 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: ,