
கச்சத் தீவை மீட்கக் கோரும் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும், அதற்காக முதல்வருக்குத் தங்கள் பாராட்டைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
பாரத நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது தமிழக மீனவர்களுக்குச் செய்த பெரும் பாதகமான செயலாகும். கச்சத் தீவில் மீன் வலை உலர்த்தவும், மீனவர்கள் ஓய்வு எடுக்கவும் இலங்கையோடு போட்டத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதை அந்நாடு மதிக்கவில்லை.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவதாகக் கூறி அவர்களைக் கொன்று குவிக்கிறது இலங்கை கடற்படை. மீனவர்களைக் கொல்ல வேண்டியதோ, அடித்துத் துன்புறுத்துவதோ வேறு எங்கும் நடைபெறாத மனிதாபிமானம் அற்ற செயல். இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இது தவிர ஆயிரக்கணக்கான மீனவர்கள் பிடித்த மீன்களை எடுத்துக்கொண்டும்,ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான விலையுள்ள மீன் வலைகளை அறுத்து கடலில் வீசியதும் நடந்துள்ளன. தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இவ்வளவு நடந்த பிறகும் மத்திய அரசு, இலங்கையிடம் இதுபோன்ற அடாத செய்லகளைச் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கவோ, நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை காத்திடவோ நடவடிக்கை எடுக்கவில்லை.
இனியும் பொறுத்துப்பயனில்லை என்ற நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை இந்து முன்னணி பாராட்டுகிறது. இதனைத் தொடர்ந்து இத்தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசை வலியுறுத்தி இதனை நிறைவேற்றிடவும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
- என்று தெரிவித்துள்ளார்.





