பூவே! பூவே!!

love-adiyar
எனக்கெனவே பிறந்தாள்!
எண்ணிப் பார்த்தேனோ-
வண்ணத் துணைமயில்
வந்து உதித்த நாளை…!

அவனியில் உதித்ததும்
‘அம்மா” என்றாளோ?
அன்றே எனை நினைத்து
‘அத்தான்” என்றாளோ?

அந்தநாள் பொக்கை
வாய்ச்சிரிப்பு-
வந்து வாழ்ந்து முடி நரைத்த பின்
சிரிக்கப் போகும்
சிரிப்பிற்குச்
சிறு வயது ‘ஒத்திகையோ”?
என் மனைவி குழந்தையாய்
தன் வீட்டில் தவழ்ந்த
காட்சிதனைக் கண் மூடி
காண்கிறேன்! ஓ…ஓ…!

மடியில் தவழ்வதற்கே- என்
மடியில் தவழ்வதற்கே
தரையில் தவழ்ந்தாளோ?- ஒரு
குறையில்லாச் சிறு நிலா…?

பூவாய் என் வாழ்வில் வந்த
பூவை பூப்படைந்த போது…

துடித்தாளோ-
துவண்டாளோ?
துன்பத்தால்
மருண்டாளோ?
விண் விண் என்று
வலி ஏற அழுதாளோ…?

சிந்தை நடுங்கி நின்றாளோ?
செய்வதறியாது
கூவினாளோ?
செத்துப் பிறக்கவும்
ஜீவன் சுமக்கவும்
பருவம் வந்ததென்று
பயந்து நின்றாளோ?

அவ்வேளையில் நான்
அங்கு இருந்திருந்தால்…

குனிந்த முகத்தைக்
கனிந்த அன்பால்
கையில் எடுத்துக் கண்ணீர் துடைத்து
உச்சி முகர்ந்து
மெச்சி முத்தமிட்டு…
செவியில் வாயிட்டு
சில சொல்வேன்.

பூவனத்து அரும்பே!
ப10வானாய் இன்றே…!
பிறப்புப் புத்தகத்தின்
பிள்ளையார் சுழி இது!
உலகச் சக்கரத்தின்
ஒரு முதல் சுழற்சி இது!
நிரந்திரத்தின்- புது
நூல் இழை இது!

தாங்கு தாயே- இத்துன்பம்
தாங்கு தாயே! நீ இதைத்
தாங்காவிடில்- இறப்பில்
தூங்கிடும் உலகம்- தாயே!

அழகு முகம்- விரி மார்பு
எழில்மிகு கை- கால்
ஆடை- அணிநகை
படிப்பு- பால் ஆடல்
இவை அல்ல பெண்…!

மாதம் ஒரு முறை நிகழும்
மாய விஞ்ஞானமாம் இது
இருந்தால் தான்- நீ
இவ்வுலகில் பெண்…!

அடியார்-

Tags: ,