தமிழ் மக்கள் தமது நிலப் பிரதேசத்தை ஆட்சி செய்கிற அதிகாரம் கிடைக்கும் வரைக்கும் போராடியே ஆகவேண்டும் என்று மே தினத்தில் அறைகூவல் விடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
“எமது இனம் விடுதலை அடைந்தால்தான் எமது தொழிலாளர்கள் விடுதலை யடைவார்கள்” என்று கூறினார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா.
கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்றது. பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவை சேனாதிராசா
“சர்வதேச நாடுகளால் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, இன்று மே தினம் கொண்டாடுகின்றார். இதுதான் ஆசியாவின் ஆச்சரியம்” என்றார் மாவை. சேனாதிராசா.
தமிழர்களின் மண், இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் போராடித்தான் ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பா.அரியநேந்திரன்
தற்போது நிலவுவது நிரந்தர சமாதானம் இல்லை என்று கூறினார் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரிய நேந்திரன் “நாங்கள் எங்கள் நிலத்துக்காகப் போராடுகின்றோம். வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகமே மட்டக்களப்பு மாவட்ட மக்களது விருப்பமும். அதனை நாங்கள் அடைவோம்” என்றார் அவர்.
சீ.யோகேஸ்வரன்
“1961ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்ட செயலகங்களை முடக்கியதைப் போன்றதொரு மாபெரும் போராட்டத்தை நடத்த தமிழரசுக் கட்சி தயாராக இருக்கிறது” என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்.
“”நாங்களே எங்களை ஆளும் காலம் விரைவில் வரும்” என்று அவர் மேலும் கூறினார். வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் நிலை வரவேண்டும் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.