மாகாணசபைகளின் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளாமல், வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசில் இருந்து விலகுவேன் என சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
மாளிகாவத்தையில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மே நாள், பேரணியில் உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உடனடியாக அரசியலமைப்பில் திருத்தம் செய்து, மாகாணசபைகளின் காணி, பொலிஸ் அதிகாரங்களை மஹிந்த அரசு பறித்துக் கொள்ள வேண்டும்.
அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால், இலகுவாக திருத்தங்களை நிறைவேற்ற முடியும்.
எனவே காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்காமல், வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால், அது தமிழ்ப் பிரிவினைவாதிகளின் தேவைகளைத் திருப்திப்படுத்துவதாக அமைவதுடன், தீவிரவாதத்தைத் தோற்கடித்ததன் பெறுமதியையும் குறைத்து விடும்.
தமிழ்ப் பிரிவினைவாதிகளை நாம் இராணுவ ரீதியாகத் தோற்கடித்துள்ள போதிலும், ஏனைய வழிகளில் அவர்கள் பலமாகவே செயற்படுகின்றனர்.
தமிழ்ப் பிரிவினைவாதிகள் வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றினால், வடக்கு மாகாணத்தில் உள்ள எல்லா இராணுவ முகாம்களையும் அகற்றி விடுவார்கள்.
மாகாண முதல்வரின் கீழ் செயற்படும் ஒரு பொலிஸ் பிரிவை உருவாக்குவார்கள்.
வடக்கு, கிழக்கில் தமது கொலனி ஆட்சியை உருவாக்குவதற்காகவே இந்தியாவும், மேற்கு நாடுகளும் அங்கு தேர்தலை நடத்த வலியுறுத்தி வருகின்றன.
வடக்கு மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், கிழக்கு மாகாணத்தை அதனுடன் இணைக்க முனைவார்கள்.
இரு மாகாணங்களும் ஏற்கனவே இணைக்கப்பட்டதன் பின்னணியில் மேற்கு நாடுகளே இருந்தன என்றும் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.