சிறிலங்காவுக்கான நிதியுதவியை விலக்கிக் கொண்டது அமெரிக்கா

tamil-news-usa
சிறிலங்காவின் நீதித்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நன்கொடை நிதியை அமெரிக்கா மீளப் பெற்றுள்ளது.
சிறிலங்காவின் நீதி அமைச்சு அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயற் திறனின்மை மற்றும் அலட்சியம் காரணமாகவே இந்த நிதியை அமெரிக்கா மீளப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் நீதித்துறையை தரமுயர்த்தும் நோக்கில், சட்டரீதியான தாமதங்களை தவிர்க்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்காகவே இந்த நன்கொடையை அமெரிக்கா வழங்கியது.

எனினும் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாத நிலையிலேயே அமெரிக்கா இந்த நிதியுதவியை திரும்பப் பெற்றுள்ளது.

நன்கொடை திரும்பப் பெறப்பட்டுள்ளதை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, சிறிலங்காவுக்கான நன்கொடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்கத் தூதரகம், அதை மீள வழங்குவதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்றும் கூறியுள்ளது.

எதிர்காலத்தில் இத்தகைய நன்கொடைகள் குறித்து அனுமானிக்க முடியாது என்றும் அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: ,