
இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ராஜபக்க்ஷ ஆட்சியை துரத்தும் காலம் நெருங்கி வருகிறது.
இவ்வேளை நாட்டில் உள்ள அனைத்து எதிரணியினரும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று மஹிந்த ஆட்சியைத் துரத்த வேண்டும். போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் நாட்டில் ஜன நாயகம் மலரவில்லை.
ஜன நாயகச் செயற்பாடுகள் மலர்ந் தாலே அரசியல் தீர்வு நம் அனைவருக்கும் கிடைக்கும். இவ்வாறு நேற்று சாவகச்சேரி நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசுக்கு எதிராக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜூன் மாதம் போராட்டங்களை நடத்தவுள்ளோம். யாழ்.மாவட்டத்தில் எமது கட்சிக்கு ஆதரவு நீண்டகாலமாக இருந்து வருகிறது. சாவகச்சேரிப் பகுதியில் எனது நண்பரும் கட்சி ஆதரவாளருமான முத்தையா என்பவர் தேர்தல் காலத்தில் தனது வீட்டையே கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தத் தருவார்.
பயங்கரவாத நடவடிக்கைகளால் எமது கட்சியின் செயற்பாடுகள் வெகுவாகக் குறைந்துள்ளன. இதனைத் தற்போது அதிகரிக்கும் செயற்றிட்டங்கள் எம்மால் தயாரிக்கப்பட்டுள்ளன.
பிரதேச சபை, நகர சபை போன்ற இடங்களில் வாழும் கீழ் மட்ட மக்கள் மத்தியிலிருந்து கட்சியின் செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்கா, ரவி கருணாநாயக்கா, சுவாமிநாதன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
சாவகச்சேரி பிரதேச சபை ஐ.தே.க. உறுப்பினர் குமார் சர்வானந்தா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் சாவகச்சேரி தொகுதிக்கான கட்சிச் செயற்குழு தெரிவு செய்யப்பட்டது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளராக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் குமார் சர்வானந்தா கட்சியின் செயலாளரினால் நியமிக்கப்பட்டார்.
அத்துடன் தென்மராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்துப் பேர் பிரதேச செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கிளிநொச்சிக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் அங்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசாவைச் சந்தித்தும் பேசினார்.
-uthayan





