ஒரு போர் வீரன், யோகி ஒருவரை பார்த்துக் கேட்டான். “உண்மையாகவே சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும் உண்டா?” என்று.
“யார் நீ” என்று கேட்டார் யோகி.
“நான் போர் வீரன்” என்றான் அவன்.
“நீ போர் வீரனா? நீ ஒரு பிச்சைக்காரனைப் போல அல்லவா இருக்கிறாய்” என்று கூறியபடியே முகத்தைக் குறுக்கினார் யோகி.
கோபமுற்ற போர்வீரன், அவனுடைய வாளை எடுக்கத்துணிந்தான். அதைப் பார்த்ததும் யோகி தொடர்ந்தார். “ஓ! நீ வாள் வைத்திருக்கிறாய். ஆனால் என் தலையை எடுக்கும் வல்லமை உன் வாளுக்கு இல்லை.” மேலும் ஆத்திரமடைந்து வாளை வீசிய வீரனைப் பார்த்து யோகி சொன்னார், ” இங்கே துவங்குகிறது உன் நரகம்”
அந்த வார்த்தைகளை உள்வாங்கி வீரன், வாளை மீண்டும் உறையிலே இட்டு யோகியைப் பார்த்து தலை வணங்கினான்.
யோகி மீண்டும் சொன்னார், “இங்கே துவங்குகிறது உன் சொர்க்கம்.”