
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் பாதுகாப்புத் தரப்பினருக்கு தொடர்பு இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
திட்டமிட்ட வகையில் குற்றவாளிகளுடன் இணைந்து பாதுகாப்புத் தரப்பினர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கைளுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோர விரும்புவோரிடம் பெருமளவில் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் சட்டவிரோத கும்பல், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாகவே அது குறித்து பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முற்பட்டவர்களை கைது செய்து விசாரணை செய்த போது இந்த விடயங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரிய இரண்டு தமிழ் குழுக்கள் அண்மையில் கைது செய்யப்ட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
எனினும், இந்த பயணங்களை ஏற்பாடு செய்த சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த எவரையும் பாதுகாப்பு தரப்பினர் கைது செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
-GTN





